எனதருமை அன்னை பூமியே ,
பிறந்த நாள் முதல் எனக்கு அடைக்கலம் கொடுத்தவள் நீ..சின்னக் குழந்தையாய் இருந்ததிலிருந்தே உன்னைச் சீண்டி விளையாடுவதில் அளவற்ற ஆனந்தம் எனக்கு ….என்னின் வாழ்க்கைக்காக என்னைச் சுற்றி இருந்த என் சகோதரர்களை அழித்தேன்.
வேட்டையாடி வாழத் தொடங்கிய போதே என்னுள் இருந்த மிருகம் வெளியில் இருந்த மிருகங்கள் அழிந்திட காரணமாகியது .
என் வசதிக்காக ,உன்மேல் வளர்ந்திருந்த மரங்களை மெல்லக் கொல்லத் தொடங்கினேன் .
எனக்கு அறிவு வளர உனக்கு அழிவு வளரத் துவங்கியது . நான் முன்னேற உன் நிதிகள் பலவற்றை அழித்தேன் .ஆம் சுற்றிப் படர்ந்திருந்த விலை மதிப்பில்லா உன் நிதியாக விளங்கும் மரங்களை அழிக்கத் தயங்கியதில்லை நான்.
சின்ன விளையாட்டென ஆரம்பித்த இந்த வலைப்பின்னல் கழுத்தைத் திருகி மூச்சுத் திணற ஆரம்பித்திருந்தாலும் இன்னும் என் விளையாட்டை நான் நிறுத்தவில்லை .
உன்னை அழிப்பது என் தேவைக்கென மனம் சமாதானம் கூற மௌனமாய்ப் புதைந்து போனது என் மனசாட்சி . புதிய கண்டுபிடிப்புகள் எனப் பலவற்றைச் செய்து என் உடல் சுறுசுறுப்புக்கு விடைகொடுத்து, மூளைக்கு மட்டுமே வேலை கொடுப்பதில் வல்லவனாக , எனக்கு நானே எல்லைகள் வகுத்துக் கொண்டேன் . அழகிய பூஞ்சோலையான உன்னைக் குப்பைத் தொட்டியாக மாற்றிவிட்டேன் .
நவீன மயமாக்கலில் நான் வைத்திட்ட முதல் அடி ,உன் அழிவைத் துவக்கி வைக்கும் மரண அடியாக இருந்தது.
மெல்ல நான் சுவாசிக்கத் துவங்கிய கணங்களில் இருந்து உன் மூச்சுதிணறல் ஆரம்பமாகியது . பரவிய தொழிற்சாலைகள் என் பெருமையைப் பறைசாற்றினாலும் ,உன்னை மாசுபடுத்தி ,
என் வாழ்வின் மரணப் பாதையின் தொலைவைக் குறுகச் செய்கின்றன . உன் விளையாட்டுக்களான பூகம்பம் , சுனாமி போன்றவற்றால் உன் வலிமை எனக்குப் புரிந்தாலும் , உன்னைக் கைக்குள் அகப்படுத்த , உன்னை மிஞ்சிட என் விளையாட்டுக்களைத் தொடர்கிறேன் .
நிகழ்காலத்தை நிம்மதியாகக் கழித்தாலும் , கண்ணுக்குத் தெரியாத எதிர் காலத்தில் என் சந்ததிகள் படப்போகும் கஷ்டங்கள் என் முன்னால் தெரிவதால் , ஏனோ மெல்ல விழித்துக் கொண்டு உன்னை அழிக்கும் என் கரங்களைக் கட்டுப்படுத்த முயல்கிறேன்.
கற்களென நினைத்து இரவைக் கடத்திட வைரங்களை ஆற்றில் போட்ட அறியாமை கொண்ட மனிதனாய் நான் இருந்தாலும், விடியும் பொழுதில் கையில் கிடைத்திட்ட வைரங்களாய் எஞ்சி இருக்கும் உன் இயற்கை வளங்கள் என் கண் முன் தென்படுகின்றன .
ஆம் நண்பர்களே ,சில சமயம் செய்வது அறியாமலும் , பல சமயம் அறிந்தும் இந்த பூமியை நாம் பாழ்படுத்தி விட்டோம் . விலை மதிக்க முடியா வைரமாய் உள்ள நம் இயற்கை வளத்தை இனிமேலாவது பாதுகாக்க முயல்வோம் .
என்றும் அன்புடன் ,
ம.சண்முகம்.
No comments:
Post a Comment